Articles by "Marthandam News"
Showing posts with label Marthandam News. Show all posts
மார்த்தாண்டம்: தாயில்லாத குழந்தையை சூடு வைத்து சித்திரவதை செய்த தந்தை விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே நடந்த சித்திரவதை சம்பவம் குறித்து தந்தையிடம் நாகர்கோவிலில் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சூரியக்கோடு பகுதியை சேர்ந்த டிரைவர் மணிகண்டன் (33). இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் ஏற்ப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும் 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

7 வயது மகள் வாவறை அரசு பள்ளியில் 2 ம் வகுப்பு பயின்று வருகிறார். மனைவி இறந்த பிறகு சமீப காலமாக வேறு பெண்களுடன் மணிகண்டன் தொடர்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மகளுக்கு உடலில் சூடு வைத்து சித்திரவதை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் பள்ளிக்கு வந்த மாணவியின் கன்னத்தில் தீக்காயம் இருந்ததை பார்த்த பள்ளி ஆசிரியர்கள் இது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி க்கு தகவலளித்தனர். சிறுமியிடம் விசாரித்த போது, தனது அப்பா தொடர்ந்து அடித்து துன்புறுத்தி நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்வதாக சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டனர்.

மணிகண்டனை நாகர்கோவில் அலுவலகம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மணிகண்டன் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.
மார்த்தாண்டம் : மார்த்தாண்டத்தில் 220 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மேம்பாலத்தில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், தமிழகம், கேரளா இடையே விரைவாக செல்லவும் 220 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டது.

அந்த மேம்பாலத்தில் கடந்த 19 ம் தேதி முதல் ஏராளமான வாகனங்கள் செல்ல தொடங்கி உள்ளன. மேம்பாலத்தில் போக்குவரத்து தொடங்கி உள்ளதால் சரக்கு வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மேம்பாலத்தின் ஒரு பகுதியில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குழி விழுந்துள்ளது. ஏற்கனவே அதிர்வு இருப்பதாக மக்கள் குற்றச்சாட்டு எழுப்பி வரும் நிலையில் குழி ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஐஐடி பொறியாளர்களின் ஆய்வு அறிக்கையை வெளிப்படையாக அறிவித்து அச்சத்தை போக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். சேதமடைந்த பகுதியை விரைவில் சீரமைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மார்த்தாண்டம்: 16 வயது சிறுமியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது, அதிகாரிகள் குறுக்கிட்டு மணப்பெண்ணை மீட்டு சென்ற சம்பவம் மார்த்தாண்டம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவமானம் அடைந்த புதுமாப்பிள்ளை சிறுமியின் பட்டு சேலையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மார்த்தாண்டம் பாறவிளையை சேர்ந்தவர் வினு வயது 31. இவர் ஒரு கட்டிட தொழிலாளி. இவருக்கும், கோழிப்போர்விளை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் முன்தினம் காலையில் மண்டைக்காட்டில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் நடந்தது. அன்று மாலையில், மணமகன் இல்லத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று கொண்டிருந்தன.

இந்நிலையில், மணப்பெண்ணுக்கு 16 வயது தான் ஆவதாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி குமுதாவுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், குழந்தைகள் மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குழுவினர் திருமண வீட்டுக்குள் நுழைந்தனர். அங்கிருந்தோரிடம் விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். இதனால் திருமண மண்டபம் முழுவதும் பரபரப்படைந்தது.

அதிகாரிகள் அங்கு மணக்கோலத்தில் நின்றிருந்த பெண்ணிடமும் விசாரித்தனர். அப்போது அவர், தனக்கு 16 வயதுதான் ஆவதாகவும்,

9ம் வகுப்பு வரை படித்துள்ள தனக்கு மேல் படிப்பு படிக்க விரும்புவதாகவும் கூறினார். இதையடுத்து, உடனடியாக திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டன.

சிறுமியை மீட்ட அதிகாரிகள் நாகர்கோவிலில் உள்ள அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். காப்பகத்திலேயே தங்கி பள்ளி படிப்பை சிறுமி தொடர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி தெரிவித்தனர். அத்துடன் மணமகன் வினுவுக்கும் அதிகாரிகள் அறிவுரை கூறினர். ஆனால் திருமணம் தடைபட்ட சம்பவம் வினுவுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. சற்று நேரத்துக்கு முன்பு தாலி கட்டிய மனைவி தன்னுடன் இல்லையே என உறைந்து நின்றார்.

இதனால் அவர் வாடிய முகத்துடனே நீண்ட நேரம் இருந்தார். வீட்டுக்கு திரும்பி வந்தும் சோகத்துடனே வினு இருந்தார். பின்னர் நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் வினுவின் அறை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, வினு மின்விசிறியில் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சிறுமியின் பட்டு சேலையிலேயே வினு தூக்கு போட்டு கொண்டிருந்ததை கண்டு பெற்றோர் கதறி கதறி அழுதனர்.
இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

விரைந்து வந்த போலீசார் வினுவின் உடலை கைப்பற்றியதுடன், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டனர். திருமண வீட்டுக்குள் நுழைந்த அதிகாரிகள் வரவேற்பு நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தியதால் அவமானம் தாங்காமலும் சிறுமி தனக்கு கிடைக்காத காரணத்தினாலும் புதுமாப்பிள்ளை வினு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் முதல்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
மார்த்தாண்டத்தில் அமைக்கப்படும் பாலத்தின் உறுதித்தன்மை குறித்து பொதுமக்களுக்கு அச்சம் எழுந்துள்ளதால் அதனை பயன்படுத்த தயங்குகின்றனர் என எம்.எல்.ஏ பிரின்ஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.
மார்த்தாண்டம் பகுதியில் பாலம்கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பாலம் தரமான பொருட்களால் கட்டப்படுகிறதா என பொதுமக்களுக்கு அச்சம் எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி எம்.எல்.ஏ பிரின்ஸ் தன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: மார்த்தாண்டத்தில் நடைபெறும் இரும்பு மேம்பால பணிகள் குறித்து பொதுமக்களிடமும், பொறியாளர்களிடமும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த சாலையில் எப்போதும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. அதற்கு ஏற்ற வகையில் பாலம் உறுதியாக அமைக்கப்படுகிறதா என்று சந்தேகமாக இருப்பதாக பொறியாளர்கள் கூறி வருகின்றனர். மேலும் பயன்படுத்தப்படும் கட்டுமான பொருட்களின் தரம் குறித்த சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.இதனால் பாலத்தின் உறுதிதன்மை குறித்து மக்களுக்கு அதிகாரிகள் விளக்க வேண்டும்.

மேற்கு வங்கத்தில் இதுபோல் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்து பெரும் உயிர்சேதம் ஏற்பட்டது. தமிழகத்திலும் இது போன்ற நிகழ்வு ஏற்படும் முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் அச்சத்தை போக்க மத்திய அமைச்சரும், அதிகாரிகளும் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கட்டடத் தொழிலாளி ஒருவர் தனது குடும்ப பொருளாதார நிலையையும் பொருட்படுத்தாமல் தனது மனைவிய மேல் படிப்பு படிக்க வைத்தார். ஆனால் கணவரையும், இரண்டு குழந்தைகளையும் தவிக்க விட்டு விட்டு தனது கள்ளக்காதலருடன் ஓடிப் போய் விட்டார் மனைவி.
கண்ணக்கோடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் ரசல்குமார் (27). கட்டட தொழிலாளியான இவரது மனைவி பெயர் ஷைனி. 22 வயதாகிறது. இருவரும் காதல் மணம் புரிந்தவர்கள். இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்.

ஷைனி பட்ட மேற்படிப்பு படிக்க விரும்பியதால் அவரை ரசல்குமார் படிக்க வைத்து வந்தார். படிப்பு தொடர்பாக அடிக்கடி நெல்லை போய் வந்தார். அப்போது டிரைவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக் காதலாக மாறியது. நேரில் பார்த்தது போக வீடு திரும்பியதும் செல்போனில் பேசியபடி இருப்பாராம் ஷைனி.

இந்த நிலையில் கடந்த 5ம் தேதி நள்ளிரவில் ஒரு போன் வந்துள்ளது. அதை எடுத்து ஷைனி நீண்ட நேரம் பேசியுள்ளார். அடுத்த நாள் காலையில் அவர் காணாமல் போய் விட்டார். ரசல்குமார் பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. வீட்டில் வைத்திருந்த 18 பவுன் நகைகள், பணம். தனது உடைகளுடன் அவர் மாயமாகி விட்டார்.

இதுகுறித்து அவர் போலீஸில் புகார் கொடுக்கவே, போலீஸார் விசாரணையில் இறங்கினர். அதில், களியக்காவிளையைச் சேர்ந்த ஒருவருடன்தான் அதிக நேரம் அவர் போனில் பேசியது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் விசாரித்தபோது அவர்தான் அந்த டிரைவர் என்றும், அவருடன் தான் ஷைனி ஓடிப் போனதும் தெரிய வந்தது. அவர்கள் தங்கிய இடத்தைக் கண்டுபிடித்த போலீஸார் அங்கு விரைந்தபோது இருவரும் அங்கிருந்து தப்பி விட்டனர். தற்போது கேரளாவுக்குப் போய் விட்டதாக கூறப்படுகிறது.

கணவரையும், இரண்டு குழந்தைகளும் பரிதவிக்க விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிப் போன மனைவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி அருகே உள்ள மார்த்தாண்டத்தில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த 10 வான்கோழிகளை மர்மவிலங்கு கடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் வடக்கு தெரு குருவிக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெகன். கூலித் தொழிலாளி. அவர் தனது வீட்டில் வான் கோழிகள் வளர்த்து வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் வான்கோழிகளை கூண்டில் அடைத்தார். காலையில் பார்த்த போது கூண்டு திறந்து கிடந்தது. 5 வான் கோழிகள் கூண்டுக்கு வெளியே இறந்து கிடந்தன.

மேலும் கூண்டிற்குள் 5 கோழிகள் இறந்து கிடந்தன. அனைத்து வான்கோழிகளும் கழுத்து மற்றும் வயிறு பகுதியில் கடித்துக் குதறப்பட்டிருந்தன. அவற்றின் ரத்தம் முற்றிலும் குடிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பகுதியில் கடந்த ஒரு ஆண்டு காலமாக வீட்டில் வளர்க்கப்படும் வான்கோழிகள், நாட்டுக் கோழிகள், ஆடுகள் நள்ளிரவு நேரத்தில் கடித்துக் கொல்லப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

இது குறித்து வனத்துறையிடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.