மார்த்தாண்டம்: 16 வயது சிறுமியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது, அதிகாரிகள் குறுக்கிட்டு மணப்பெண்ணை மீட்டு சென்ற சம்பவம் மார்த்தாண்டம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவமானம் அடைந்த புதுமாப்பிள்ளை சிறுமியின் பட்டு சேலையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மார்த்தாண்டம் பாறவிளையை சேர்ந்தவர் வினு வயது 31. இவர் ஒரு கட்டிட தொழிலாளி. இவருக்கும், கோழிப்போர்விளை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் முன்தினம் காலையில் மண்டைக்காட்டில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் நடந்தது. அன்று மாலையில், மணமகன் இல்லத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று கொண்டிருந்தன.
இந்நிலையில், மணப்பெண்ணுக்கு 16 வயது தான் ஆவதாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி குமுதாவுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், குழந்தைகள் மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குழுவினர் திருமண வீட்டுக்குள் நுழைந்தனர். அங்கிருந்தோரிடம் விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். இதனால் திருமண மண்டபம் முழுவதும் பரபரப்படைந்தது.
அதிகாரிகள் அங்கு மணக்கோலத்தில் நின்றிருந்த பெண்ணிடமும் விசாரித்தனர். அப்போது அவர், தனக்கு 16 வயதுதான் ஆவதாகவும்,
9ம் வகுப்பு வரை படித்துள்ள தனக்கு மேல் படிப்பு படிக்க விரும்புவதாகவும் கூறினார். இதையடுத்து, உடனடியாக திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டன.
சிறுமியை மீட்ட அதிகாரிகள் நாகர்கோவிலில் உள்ள அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். காப்பகத்திலேயே தங்கி பள்ளி படிப்பை சிறுமி தொடர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி தெரிவித்தனர். அத்துடன் மணமகன் வினுவுக்கும் அதிகாரிகள் அறிவுரை கூறினர். ஆனால் திருமணம் தடைபட்ட சம்பவம் வினுவுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. சற்று நேரத்துக்கு முன்பு தாலி கட்டிய மனைவி தன்னுடன் இல்லையே என உறைந்து நின்றார்.
இதனால் அவர் வாடிய முகத்துடனே நீண்ட நேரம் இருந்தார். வீட்டுக்கு திரும்பி வந்தும் சோகத்துடனே வினு இருந்தார். பின்னர் நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் வினுவின் அறை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, வினு மின்விசிறியில் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சிறுமியின் பட்டு சேலையிலேயே வினு தூக்கு போட்டு கொண்டிருந்ததை கண்டு பெற்றோர் கதறி கதறி அழுதனர்.
இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
விரைந்து வந்த போலீசார் வினுவின் உடலை கைப்பற்றியதுடன், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டனர். திருமண வீட்டுக்குள் நுழைந்த அதிகாரிகள் வரவேற்பு நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தியதால் அவமானம் தாங்காமலும் சிறுமி தனக்கு கிடைக்காத காரணத்தினாலும் புதுமாப்பிள்ளை வினு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் முதல்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
Post A Comment: