Articles by "Gulf News"
Showing posts with label Gulf News. Show all posts
இம்மாதத் தொடக்கத்தில் இருந்து கத்தார் மீது தடை விதித்திருந்த வளைகுடா நாடுகள் கத்தாரிடம் என்ன எதிர்பார்க்கின்றன என்பது குறித்து ஒரு பட்டியலை அளித்துள்ளன.
13 விஷயங்கள் அடங்கிய அந்த பட்டியலில், அல் ஜஸீரா தொலைக்காட்சியை மூடுவது, ஒரு துருக்கி ராணுவ தளத்தை மூடிவிட்டு, இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புடனான எல்லா தொடர்புகளையும் துண்டிப்பது போன்றவை அடங்கும்.

கத்தாருக்கும், வளைகுடா நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்து கொண்டிருக்கும் குவைத் மூலம் இந்த பட்டியல் கத்தாருக்கு அளிக்கப்பட்டது.

சௌதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள், கத்தார் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டுகின்றன, இதை காத்தார் மறுத்துள்ளது.

இந்த நாடுகள் கத்தார் மீது தங்களுக்கு இருக்கும் குறைகளை பற்றிய விவரங்களை வெளியிடவில்லை என்பது புதிராக உள்ளது என்று இந்த வாரத்தின் தொடக்கத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
வளைகுடா நாடுகளில் ஆந்திரப் பெண்கள், விலை வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும், இதைத் தடுத்து அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆந்திர மாநில என்ஆர்ஐக்கள் நலத் துறை அமைச்சர் பல்லே ரகுநாத ரெட்டி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்குக் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பெண்கள் வீட்டு வேலைக்காக வளைகுடா நாடுகளுக்குச் செல்கின்றனர். அவ்வாறு வீட்டு வேலைக்காக ஆந்திராவில் இருந்து சென்ற பெண்கள் பலர் பொய்யான வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக ஆந்திர அமைச்சர் பல்லே ரகுநாத ரெட்டி புகார் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்கள் செக்ஸ் அடிமைகளாக விற்பனை செய்யப்பட்டு, கடும் சித்ரவதைகளை அனுபவிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், இது குறித்து ஆந்திர மாநில என்ஆர்ஐக்கள் நலத் துறை அமைச்சர் பல்லே ரகுநாத ரெட்டி கூறுகையில், "அந்தப் பெண்கள் மிகுந்த வேதனைக்குள்ளாகியுள்ளனர். அவர்களை மீட்டு உடனடியாக நாட்டுக்குக் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மத்திய அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட வளைகுடா நாடுகளின் அரசுகளுடன் பேசி இந்த விவகாரத்தை விரைவில் சுமூகமாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உணவு, உடை உள்ளிட்டவை உடனடியாக வழங்கப்பட வேண்டும்" என்றார்.

பஹ்ரைன், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் ஆகிய நாடுகளில் 60 லட்சம் இந்தியத் தொழிலாளரக்ள் இருப்பதாக ஒரு புள்ளி விவரத் தகவல் தெரிவிக்கிறது. இவர்களில் பல பெண்களும் அடக்கம்.

தங்களது குடும்பத்தைப் பிரிந்து கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இங்கு வீட்டு வேலை செய்ய வரும் இவர்களில் பலரும் ஏஜென்டுகளாலும், வேலையில் சேரும் இடத்தில் உள்ல முதலாளிகளாலும் பல்வேறு கொடுமைக்கு ஆளாகின்றனர்.

ரெட்டி தனது கடிதத்தில் மேலும் கூறுகையில், "ஆந்திரா மட்டுமல்லாமல் தெலுங்கானாவைச் சேர்ந்த பெண்களும் கூட பெருமளவில் இதுபோல ஏமாற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஏதோ சில்லறை விற்பனைக் கடைகளில் பொருட்களை விற்பது போல விற்பனை செய்கிறார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் ஒரு பெண்ணிற்கு குறைந்தது ரூ. 4 லட்சம் விலை வைக்கப்படுகிறதாம். பஹ்ஹைனில் ரூ. 1 லட்சம் முதல் 2 லட்சம் விலை நிர்ணயித்துள்ளனராம். இவர்களை தீவிரவாதிகளுக்கும் விற்பனை செய்வதாக அதிர்ச்சித் தகவல்கள் வருகின்றன.

சமீபத்தில் வளைகுடா நாடுகளில் பாதிக்கப்பட்ட 25 பெண்கள் அரசிடம் உதவி கோரி கடிதம் அனுப்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விரைவில் ஆந்திர மாநில அமைச்சர்கள் குழு சவுதி செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடு சென்று சித்ரவதை அனுபவிக்கும் குமரி மற்றும் நெல்லை மாவட்ட மீனவர்கள் 25 பேரையும் உடனடியாக மீட்டு சொந்த ஊர் அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும் என தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அவர்கள் தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறி இருப்பதாவது:

ஐக்கிய அரபு நாட்டில் அஜ்மான் துறைமுகத்தில் குமரி மாவட்டம் புத்தன் துறையை சேர்ந்த அலி, ஆண்டனி, சதீஷ், மெதீஸ், பனிப்பிச்சை, ராஜன், புதூரை சேர்ந்த பாலமுருகன், சஞ்சய் பெருமாள், கன்னியாகுமரியை சேர்ந்த சந்திராயப்பன், பெலிக்ஸ், சஞ்சய்காந்தி, சகாய ஆன்டோ, ஜான்சன், ரமேஷ், கோவளத்தை சேர்ந்த சகாய அபிஷேக், பொழிக்கரையை சேர்ந்த பிரகாசம், ராஜாக்க மங்கலம் துறையை சேர்ந்த சிலுவை, ஜோசப், சசிகுமார், அந்தோணி, ராமன்புதூரை சேர்ந்த ஜேம்ஸ் மற்றும் நெல்லை மாவட்டம் இடிந்த கரையை சேர்ந்த தாமஸ், ஜெரான், அயிஷ், ராய்ஸ்டன் ஆகிய 25 மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.

இவர்களுடன் அஜ்மான் பகுதியை சேர்ந்த இரண்டு மீனவர்களும் கடலுக்கு சென்றனர். இவர்களில் ஒருவர் படகில் இருந்து தவறி கடலில் விழுந்தார். அவரை உடன் இருந்த மீனவர்கள் காப்பாற்ற முயன்றனர். அதற்குள் அவர் கடலில் மூழ்கி மாயமாகி விட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக படகின் உரிமையாளர்கள் மதார் அலி மதார், ஜமால் அலி மதார் ஆகியோர் ஐக்கிய அரபு நாட்டு போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் தமிழக மீனவர்கள் அனைவரும் விசாரணைக்காக போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் பாஸ்போர்ட்டுகளை படகு உரிமையாளர்கள் பறித்துக்கொண்டனர். மேலும் அவர்கள் ஐக்கிய அரபு நாட்டுக்குள் தொழில் செய்வதற்கு வழங்கப்பட்ட சான்றிதழையும் பறித்துக்கொண்டனர்.

இதனால் தமிழக மீனவர்கள் 25 பேரும் சொந்த ஊர் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இவர்களை படகின் உரிமையாளர்கள் படகிலேயே சிறை வைத்து சித்ரவதை செய்துள்ளனர். அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை கும்பலில் இருந்த ஒருவர் படம் எடுத்து சொந்த ஊரில் உள்ள உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

வெளிநாடு சென்று சித்ரவதை அனுபவிக்கும் குமரி மற்றும் நெல்லை மாவட்ட மீனவர்கள் 25 பேரையும் உடனடியாக மீட்டு சொந்த ஊர் அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவின் நகல் மத்திய அரசுக்கும், தூதரக அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
கச்சா எண்ணை விலையில் ஏற்பட்ட சரிவு காரணமாகவும், கிரீஸ் நாட்டின் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், ஐரோப்பிய நாடுகளின் பங்கு சந்தைகளில் கடும் வீழ்ச்சி காணப்பட்டது. வளைகுடா நாடுகளின் பங்கு சந்தையிலும் கச்சா எண்ணை விலை வீழ்ச்சி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணை விலை வீழ்வது ஒரு வகையில் நல்லது என்றாலும், அதன் பின்விளைவுகள் வேறுமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த கூடியவை என்பது இதன் மூலம் தெரியவருகிறது.
ஸ்டாக் ஐரோப்பா 600, மற்றும் பிரான்சின் சிஏசி தலா 0.7 சதவீதமும், லண்டனின் எப்டிஎஸ்இ 0.8 சதவீதமும் வீழ்ச்சியை சந்தித்தன. ஜெர்மனியின் பங்கு சந்தையான டாக்ஸ் கடந்த பத்து மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது. இத்தாலியின் பங்கு சந்தை எம்ஐபியும் 0.3 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தது. ஸ்பெயின் நாட்டின் ஐபிஇஎக்ஸ் 1.2 சதவீத சரிவை சந்தித்தது.

கிரீசில் நடந்து வரும் தேர்தலில், யூரோ நாடுகளை விட்டு பிரிந்து தனித்து செயல்பட துடிக்கும் கட்சி ஆட்சிக்கு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுவும் பங்கு சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர், சந்தை பார்வையாளர்கள். எண்ணை விலை குறைவதால் பண வாட்டம் அதிகரித்துள்ளதும் பங்கு சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி முதலீட்டாளர்களை அச்சப்படுத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, லண்டனின் ஐசிஇ பியூச்சர்ஸ் எக்சேஞ்ச் படி, ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 51.50 அமெரிக்க டாலர்களாக இருந்தது. 2009 ஏப்ரல் மாதத்திற்கு பிறகு இவ்வளவு தூரம் கச்சா எண்ணை விலை வீழ்ந்தது நேற்றுதான். அதே நேரம் நியூசிலாந்து மெர்கன்டைல் எக்சேஞ்ச் நிலவரப்படி, ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 48 அமெரிக்க டாலர் மதிப்புக்கு இருந்தது.

எண்ணை உற்பத்தி செய்யும் வளைகுடா நாடுகளின் பங்கு சந்தைகளிலும், இதன் தாக்கம் எதிரொலித்தது. துபாய் பங்கு சந்தை 3450 புள்ளிகளுடன், 3.2 சதவீத வீழ்ச்சியுடன் முடிவடைந்தது. பக்கத்து நாடான அபுதாபி பங்கு சந்தை 4311.89 புள்ளிகளுடன் 2.7 சதவீத வீழ்ச்சியுடன் முடிவடைந்தது. மத்திய கிழக்கு நாடுகளின் மிகப்பெரிய பங்கு சந்தையான சவுதி அரேபியாவின், தடாவுல், 2.6 சதவீத வீழ்ச்சியுடன், 7894.6 புள்ளிகளுடன் முடிவடைந்தது.
இன்டர்போல் போன்ற பாணியில் அரபு நாடுகள் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் தங்களுக்கென்று பொதுவான காவல்துறையையும், பொதுவான கடல்படையையும் நிறுவ முடிவு செய்துள்ளன.
பக்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இணைந்து 'வளைகுடா அரபு நாடுகளுக்கான கூட்டுறவு கவுன்சில்' (GCC) என்ற அமைப்பை 1981ம் ஆண்டு ஏற்படுத்தியிருந்தன.
இந்த அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு கத்தார் நாட்டு தலைநகர் தோஹாவில் நடந்தது. இக்கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் இரு முக்கியமான முடிவுகள் இரண்டு எடுக்கப்பட்டுள்ளன. இன்டர்போல் பாணியில், இக்கூட்டமைப்பில் உள்ள அரபு நாடுகளுக்காக பொதுவான காவல்துறையை உருவாக்க இக்கூட்டம் முடிவு செய்துள்ளது. இதற்கு GCC-Pol என்று பெயர் சூட்டப்படும்.

கத்தார் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷேக் காலித் பின் முகமது அல் அட்டியா கூறுகையில் "இந்த போலீஸ் படை தீவிரவாதத்திற்கு எதிராக போராடும். இன்டர்போல் போல வளைகுடா நாடுகளில் இந்த போலீஸ் படை செயல்படும்" என்றார். இந்த போலீஸ் படை அபுதாபியை தலைமையிடமாக கொண்டு இயங்கப்போகிறது.

மேலும், அனைத்து உறுப்பு நாடுகளுக்குமான பொதுவான கடற்படை பக்ரைனை தலைமையிடமாக கொண்டு அமைய உள்ளது. இருப்பினும் கப்பல்படை குறித்த மேலதிக தகவல்களை வெளியிட இக்கூட்டமைப்பு மறுத்துவிட்டது.

மேலும், எகிப்து நாட்டு அரசுக்கு ஜிசிசி நாடுகள் முழு ஆதரவை அளிக்கும் என்றும் இக்கூட்டத்தில் ஒரு மனதாக முடிவெடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாட்டில் வளர்ந்து வரும் தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள உறுப்பு நாடுகள் இணைந்து செயல்படுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஈராக்கில் தவித்து வரும் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து 6 வளைகுடா நாடுகளின் தூதர்களுடன் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆலோசனை நடத்தினார்.
ஈராக்கில் பெரும்பாலான நகரங்களை சன்னி முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு கைப்பற்றியுள்ளது. இதனால் அங்கு பணிக்கு சென்ற சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் கதி பெரும் கேள்விக்குறியாகி இருக்கிறது.

இந்த நிலையில் 6 வளைகுடா நாடுகளின் தூதர்களுடன் டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று ஆலோசனை நடத்தினார். குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன். சவூதி அரேபியா தூதர்களும் வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சரான வி.கே.சிங்கும் இந்த ஆலோசனைக் கூடத்தில் கலந்து கொண்டனர்.

இந்தியர்களை எந்த நாட்டின் வழியாக எப்படி வெளியேற்றுவது என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அத்துடன் மொசூல் நகரில் தீவிரவாதிகள் கடத்தி வைத்துள்ள 39 இந்தியர்களின் குடும்பங்களையும் சுஸ்மா ஸ்வராஜ் சந்தித்து பேசினார்.