குழந்தை வளர்ப்பில் தாயானவள் கட்டாயமாக இருப்பார். ஆனால், பெரும்பாலும் தந்தையானவர் இதில் இணையாமல் இருக்கிறார். தந்தையும் குழந்தை வளர்ப்பில் ஈடுபட வேண்டும். குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான சில கடமைகள் தந்தைக்கு உள்ளன. அவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு பின்பற்றினால் வாழ்க்கை சுகம். சமூகத்துக்கு நல்ல குழந்தையை கொடுக்கலாம்.
முதல் கடமை
குழந்தையைத் தாயானவள் பார்த்துக்கொள்வதுபோல, குழந்தையின் தாயை நீங்கள் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். உங்களது மனைவியையும் சேர்த்து நீங்கள் கவனிக்க வேண்டியது அவசியம். இதுவே முதல் கடமை.
இரண்டாம் கடமை
குழந்தையை குளிப்பாட்டுவது
தொட்டிலில் போட்டு தூங்க வைப்பது
பாட்டில் பாலை குடிக்கும் குழந்தைகளுக்கு சரியான நேரத்துக்குத் தவறாமல் பால் தருவது.
நாப்கின் மாற்றுவது.
குழந்தைக்கு தேவையானவற்றை வாங்கி தருவது
குழந்தையுடன் நேரம் செலவழிப்பது
இதையெல்லாம் நீங்கள் செய்தால் தாய்க்கு ஓய்வு கிடைக்கும். உடல் புத்துணர்வு அடைந்த பின்தான் எந்த வேலையும் தாயால் சீராக செய்ய முடியும்.
சில குழந்தைகள் தந்தையிடம் செல்லாது? ஏன்?
குழந்தையை தூக்குவது, கொஞ்சுவது, உணவு ஊட்டுவது என முழுமையாக தாயே குழந்தையை பராமரித்தால், தாயிடம் மட்டுமே குழந்தைக்கு நல்லுறவு இருக்கும். தந்தையை வேறு ஒரு ஆளாக குழந்தை புரிந்து கொள்ளும். தந்தையர்கள் சிலர் விளையாட்டுக்காக குழந்தையை மிரட்டி கொண்டே இருப்பார்கள். இதனாலும் குழந்தை தந்தையிடம் செல்லாது. தாயுடன் மட்டுமே நெருக்கம் காண்பிக்கும்.
தந்தை செய்ய வேண்டியவைகள்
குழந்தையுடன் விளையாடுதல்
நல்லது சொல்லிக் கொடுத்தல்
குழந்தைக்கு வரைய கற்றுக் கொடுப்பது
குழந்தையின் மனதில் நல்ல எண்ணங்களை உருவாக்குவது
மரியாதை சொல்லி தருவது
குழந்தைகளை டிவி பார்க்காமல் தவிர்ப்பது
மொபைலில் விளையாட விடாமல் தவிர்ப்பது
குழந்தைகள் முன் செல்போன் அதிகமாக பயன்படுத்துவதைத் தவிர்ப்பது.
குத்துச்சண்டை, நாடகங்கள் போன்ற டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைத் தவிர்ப்பது.
குழந்தையை ஓடியாடி விளையாட செய்வது.
நல்ல தரமான கதைகளை சொல்வது
தந்தை இப்படி பல நல்ல பொறுப்புகளை எடுத்துக்கொண்டால் குழந்தை இச்சமூகத்தில் நல்ல குழந்தையாக வளரும்.
உணவுகளைப் பற்றி தந்தை குழந்தையிடம் சொல்ல வேண்டியவை
இதை சாப்பிடகூடாது. அதை சாப்பிடகூடாது எனச் சொல்வதைவிட இதைச் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. இதைச் சாப்பிட்டால் உடலுக்கு கேடு விளைவிக்கும் என எடுத்து சொல்ல வேண்டும். தனக்கு கீரை பிடிக்கவில்லை என்றால் குழந்தைக்கும் அதைச் சொல்லிதர கூடாது. தன் சொந்த கருத்துகளை குழந்தையின் மீது திணிக்க கூடாது. கட்டாயப்படுத்தி குழந்தைகளுக்கு பிடிக்காததை செய்வதோ செய்ய சொல்வதோ கூடாது. குழந்தை துரித உணவுகளை ஆசைப்பட்டு கேட்டால், உடனே வாங்கி தர கூடாது. இதையெல்லாம் ஏன் சாப்பிட கூடாது என முதலில் சொல்லி பழக்குங்கள்.
பள்ளிக்கு செல்ல அழும் குழந்தைகள்
பொய் சொல்லும் குழந்தைகள்
அதீத செயல்பாடுடன் உள்ள குழந்தைகள்
இவர்களைத் தாய் கவனிப்பதுடன் தந்தையும் சேர்ந்து கவனிப்பது நல்லது. இவர்களுக்கு மனம் மற்றும் உடல் ரீதியான சிகிச்சைகளைத் தர வேண்டும். கவுன்சலிங் செய்வதும் நல்ல பலன் கொடுக்கும்.
Post A Comment: