ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளைத் திட்டுவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தெரிந்து கொண்டால், நீங்கள் மாறுவதோடு, நேர்மறை சக்திகளையும் எண்ணங்களையும் உங்கள் குடும்பத்தில் ஏற்படுத்த முனைந்து ,உங்கள் குழந்தைகளையும் தன்னம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் வளர்க்கும் சூழலை ஏற்படுத்துவீர்கள்.உங்கள் குழந்தைகளைத் திட்டுவதால் ஏற்படும் 7 பாதிப்புகளை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்!
1.மன உளைச்சல் / மன வருத்தம்

ஒருவர் நம்மை தொடச்சியாகத் திட்டுவதாக எண்ணிக்கொள்ளுங்கள். அப்போது நம் மனம் சுக்கல் சுக்கலாக உடைந்துவிடும்.இது எதார்த்தமான உண்மை தானே. உங்கள் குழந்தையை நீங்கள் தொடர்ந்து திட்டிக் கொண்டே இருக்கும்போது அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அதிகம் வருத்தம் கொண்ட மனதோடு இருப்பதால் அவர்கள் எப்போதும் சோர்ந்தே காணப் படுவார்கள். இது அவர்களது வளர்ச்சியையும், வயதிற்கு ஏற்ற அறிவையும் பாதிக்கும்.மன உளைச்சலே பல கடுமையான நோய்களுக்கும் முதல் படி என்பதை தயவு செய்து நினைவு கூறுங்கள்.எதிர்காலத்தில் இது தற்கொலை எண்ணத்தைக் கூடத் தூண்டிவிடும்.

2. உற்சாகம் குறைவது

உங்கள் குழந்தையின் உற்சாகம் குறையத் தொடங்கும். நாம் செய்வது சரியா தவறா என்று புரியாமல் குழப்ப நிலைக்குத் தள்ளப்படுவர். நம் அப்பா அல்லது அம்மா எதற்காகத் திட்டுவார்கள் என்று கூட யூகிக்கத் தெரியாமல் தவிக்கத் தொடங்குவர். நாளடைவில் அவர்களுக்கு எதுவும் செய்ய உற்சாகம் இல்லாமல் போய் விடும்.படிப்படியாக மந்தநிலை அடைவர்.எந்த விசயத்திலும் நாட்டம் இருக்காது.சமவயதில் உள்ள மற்ற பிள்ளைகளுடன் பேச மாட்டார்கள்,கூடி விளையாட மாட்டார்கள்.சில நாட்களிலே தனி உலகத்தில் முடங்கி விடுவர்.இந்த நிலை நம் பிள்ளைகளுக்கு மறந்தும் வர நாம் அனுமதிக்கக் கூடாது.

3. பாதுகாப்பற்ற உணர்வு

ஒரு குழந்தை தனக்கு அம்மா அப்பா இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையோடு தான் இந்த உலகத்தில் ஜனித்து வாழத் தொடங்குகிறது. அப்படி இருக்கும் போது, அவர்களே தங்களைத் தொடர்ந்து திட்டிக் கொண்டு இருந்தால்,எப்படி அவர்கள் உங்களிடமிருந்து ஒரு பாதுகாப்பான உணர்வைப் பெறுவார்கள்? குழந்தைகளுக்கு மனதளவில் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவது பெற்றோர்களின் முக்கிய பங்காகும்.

4. பொய் சொல்லத் தொடங்குவது

இது நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம். தம் பெற்றோர்களிடமிருந்து திட்டு வாங்காமல் இருக்க, தாங்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவற்றை மறைக்க அவர்களிடம் சிறு சிறு பொய்களைக் குழந்தைகள் சொல்லத் தொடங்கி விடுவார்கள். இதற்கு முழு காரணமும் எப்போதும் அச்சுறுத்தும் வகையில் பெற்றோர்கள் நடப்பதுவே ஆகும். உங்கள் குழந்தைகளுடன் நல்ல நண்பனாகத் தோழமையோடு இருக்கப் பழகுங்கள்.அப்போது மட்டுமே அவர்கள் எந்த பிரச்சனையையும் மனம் விட்டுப் பேசுவார்கள்.அவர்களுக்கு அந்த நம்பிக்கையை நாம் தருவது முக்கியம்.

5. பெற்றோர்கள் மீது பயம் ஏற்படுவது

ஒரு குழந்தை தன் வாழ்க்கையில் எந்த இடத்திலும் பயம் இல்லாமல் இருப்பதுவே ஆரோக்கியமான சூழல்.ஆனால் இன்றைய கால கட்டத்தில் குழந்தை தன் சொந்த வீட்டிலேயே அச்சத்தோடுதான் வளருகின்றது.இது முற்றிலும் கசப்பான உண்மை.அதிக பயம் அவர்கள் தன்னம்பிக்கையை இழக்கச் செய்வதோடு அவர்களை வாழ்க்கையில் தவறான பாதையில் செல்லவும் தூண்டிவிடுகிறது.

6. படிப்பில் ஆர்வம் குறைவது

உங்கள் குழந்தையை நீங்கள் எப்போதும் திட்டிக் கொண்டே இருந்தால் அவர்கள் படிப்பு, கைத்திறன் அல்லது விளையாட்டு போன்ற விசயங்களில் ஆர்வம் குறைந்து காணப்படுவார்கள். தனக்கு உற்சாகத்தைத் தரக்கூடிய பெற்றோர்களே எப்போதும் திட்டிக் கொண்டு இருந்தால் எப்படி அந்தக் குழந்தை ஆர்வத்தோடு இருக்கும்? என்று நீங்கள் சற்று யோசிக்க வேண்டும்.

7. தன்னம்பிக்கை இழப்பது

நீங்கள் தொடர்ந்து உங்கள் குழந்தையைத் திட்டிக் கொண்டே இருந்தால் அவன் நிச்சயம் ஒரு நாள் தன்னம்பிக்கையை இழந்து விடுவான். மனதில் நீங்கள் ஒன்றை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையோடு வளரும் குழந்தைகள் மட்டுமே தங்கள் வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி அனைத்து விசயங்களிலும் வெற்றி பெற்று முன்னேறிச் செல்ல முடியும். இல்லை என்றால் தன்னுடைய அடிப்படைத் தேவைகளுக்குக் கூட ஒருவரைச் சார்ந்து வாழ வேண்டிய நிலைக்கு அவன்/அவள் தள்ளப் பட நேரிடும். மேலே குறிப்பிட்டுள்ள விசயங்களை மனதில் கொண்டு உங்கள் குழந்தைகளுடன் நீங்கள் மகிழ்ச்சியாகவும் நல்ல நண்பனாகவும் இருக்க வேண்டும்.அவர்களை எப்போதும் திட்டிக் கொண்டே இருக்காமல்,உங்கள் இல்லத்தில் அன்பைப் படரவிடுங்கள்.எதையும் குணமாகவும்,பக்குவமாகவும் எடுத்துக் கூறுங்கள்.குழந்தைகள் கண்ணாடி மாதிரி,கவனமாகக் கையாளுங்கள்.இறுதியாக நம் அன்பில் விழைந்தவர்களே பிள்ளைகள்,அவர்களையும் அன்பு வெள்ளத்தில் திளைக்கவிடுங்கள். இது அவனை/அவளை ஒரு நல்ல மனிதனாக வளர வழி செய்வதோடு,வெற்றியாளராகவும் மாற்ற உதவும்.
Axact

Kumari News18

"Kumari News18" E-Magazine from Nagercoil, Kanyakumari District, Tamilnadu. The Website has been publishing News and Information since June 2020. It is organised by YemYes Network. Through this site you can find News, Information, Historical Notes, Scientific Information, Achievers Articles, Stories and more...

Post A Comment: