நாகர்கோவில் கணியாகுளம் அருகே இலந்தையடியில் உள்ள கால்வாயில் ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் குளிப்பதற்கு படித்துறை உள்ளது. ஆண்கள் குளிப்பதற்காக இருந்த படித்துறையை யாரோ இடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு கண்டனம் தெரிவித்தும், இடித்த படித்துறையை மீண்டும் கட்டித்தர கோரியும் அந்த பகுதி மக்கள் திடீரென அங்குள்ள சாலையில் தரையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். இதற்கு மலைவிளை பாசி தலைமை தாங்கினார்.
தகவல் அறிந்த வடசேரி போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் சமரசம் ஆகவில்லை. போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து படித்துறை சம்பந்தமாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசி பிரச்சினைக்கு தீர்வு காணும்படி போலீசார் அறிவுறுத்தினர். இதனையடுத்து பொதுமக்கள் சமரசம் அடைந்து மறியலை கைவிட்டனர். பொதுமக்கள் மறியல் செய்த சாலையில் அவ்வப்போது தான் வாகனங்கள் செல்லும். இதன் காரணமாக மறியல் போராட்டத்தால் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அகில இந்திய விவசாய சங்க மாவட்ட செயலாளர் மலைவிளைபாசி உள்பட 19 பேர் மீது வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Post A Comment: