பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 18), தொழிலாளி. இவர் கன்னியாகுமரி அருகே ரஸ்தாகாடு என்ற இடத்தில் தென்னந்தோப்பில் வேலை செய்து வந்தார். இவருக்கு ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. மனைவியை பீகாரில் விட்டு விட்டு அருண்குமார் மட்டும் குமரியில் தங்கியிருந்தார்.
இந்தநிலையில் பீகாரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அருண்குமாரின் மனைவி மருத்துவ பரிசோதனைக்காக சென்று வந்தார். அப்போது, ஆஸ்பத்திரியில் உள்ள ஊழியருடன் அவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை அவரது உறவினர்கள் கண்டித்ததாக தெரிகிறது. ஆனால், கள்ளக்காதலை அவரால் கைவிட முடியவில்லை. இதனால் அருண்குமாரின் மனைவி கள்ளக்காதலனுடன் ஓடியதாக தெரிகிறது. இதுபற்றி பீகாரில் உள்ள உறவினர்கள், அருண்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதை அறிந்த அருண்குமார் மிகுந்த மன வேதனை அடைந்தார். அவரை சக தொழிலாளர்கள் தேற்றி வந்தனர்.
எனினும் அவரால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை. மனைவி தனக்கு துரோகம் செய்து விட்டாரே என விரக்தியின் உச்சிக்கே சென்ற அவர் தற்கொலை செய்யும் முடிவை எடுத்தார். நேற்று முன்தினம் இரவு தென்னந்தோப்பில் உள்ள 60 அடி ஆழ கிணற்றில் திடீரென குதித்து விட்டார். இதை பார்த்த சக தொழிலாளர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால், முடியவில்லை.
கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் வெங்கட சுப்பிரமணியன், முன்னணி தீயணைப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று அருண்குமாரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மூழ்கிய உடல் வெளியே வராததால் மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதற்கிடையே நேற்று காலையில் நாகர்கோவிலில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது.
கிணற்றில் இருந்து மின் மோட்டார் மூலம் 20 அடி தண்ணீரை வெளியேற்றி விட்டு, கிணற்றுக்குள் இறங்கி தேடினர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு மதியம் 3 மணியளவில் அருண்குமாரின் உடல் மீட்கப்பட்டது. உடலை வலை மூலம் மேலே கொண்டு வந்தனர்.
பின்னர் கன்னியாகுமரி போலீசார், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவி கள்ளக்காதலனுடன் ஓடியதால் வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Post A Comment: