அமெரிக்காவின் சார்லெட் நகரில் நடந்த பொங்கல் விழாவில் பெரும் திரளான தமிழர்கள் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.

பொங்கல் விழாவை உலகெங்கும் உள்ள தமிழர்கள் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். அதேபோல அமெரிக்காவிலும் பல நகரங்களிலும் பொங்கல் விழா நடைபெற்றது.
சார்லெட் நகரிலும் அங்குள்ள சார்லெட் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் பிரமாண்ட பொங்கல் விழா சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. சார்லெட் நகரில் வசிக்கும் தமிழர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டு பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர். சிலம்பம், பறை, கும்மியடி, மயிலாட்டம், கரகாட்டம், பரத நாட்டியம், இசை, நாடகம், குத்தாட்டம், கிராமிய நடனம் என்று களைகட்டியது இந்த பொங்கல் விழா.
அதேபோல சிறார்கள் கலந்து கொண்ட நடனம், நாடகம். பெரியவர்கள் பாடிய பாடல்கள் என விழாவே அமர்க்களப்பட்டது. ஆண்களும் பெண்களுமாக இணைந்து நடத்திய பறையாட்டம்தான் விழாவின் ஹைலைட்டாக அமைந்தது. மொத்த அரங்கும் அதர அந்த பறையடி அனைவரையும் நம் கலாச்சாரத்தின் பாரம்பரியத்தை உணர வைத்து உணர்ச்சிவசப்பட வைத்தது. கண்டு களித்தோருக்கு பெரும் விருந்தும் காத்திருந்தது.. அதை வந்திருந்த அத்தனை பேரும் உண்டும் களித்தனர். சூடான சுவையான சைவம், அசைவம் என இரு வகைகளிலும் நம்ம ஊர் சாப்பாடு களை கட்டியிருந்தது. அது மட்டுமா கோலத்தை வரைந்து அதையும் காட்சிக்கு வைத்திருந்தனர்.
ஜல்லிக்கட்டு மட்டும்தான் நடத்தவில்லை.. மற்றபடி நம்ம ஊரில் பொங்கலை எப்படி கொண்டாடுவோமோ அதே அளவுக்கு இந்த விழாவும் சிறப்பாக அமைந்திருந்தது. அமெரிக்காவில் இருப்பது போன்ற உணர்வே இல்லை. நம்ம ஊரில் இருக்கும் உணர்வுதான் அனைவருக்கும் ஏற்பட்டது என்றால் அது மிகையில்லை.
Post A Comment: