கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே 80 வயதான முதியவரை அவர் பெற்ற பிள்ளைகளே வீதியில் வீசி விட்டுச் சென்ற கொடுமை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தக்கலை அருகே உள்ள அம்பலத்தடிவிளை பகுதியைச் சேர்ந்தவர் தங்கையன். 80 வயதாகும் அவர் மரம் ஏறும் தொழிலாளி ஆவார். சில மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்து அடிபட்டதில் கால் முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் நடமாட்டம் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டார்.
தங்கையனுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மனைவி இறந்து விட்டார். பிள்ளைகள் தங்கையனின் சொத்துக்கள் மீது மட்டுமே பாசம் வைத்திருந்தனர். தங்கையன் நடமாட்டம் இல்லாமல் முடங்கும் நிலை ஏற்பட்டதால் அவரைப் பார்த்துக் கொள்ள முகம் சுளித்தனர். இந்த நிலையில் நெருக்கடி கொடுத்து அவரது சொத்துக்களை மகன்கள் இருவரும் தங்களது பெயர்களுக்கு மாற்றிக் கொண்டனர்.
இதையடுத்து தந்தையை இரு மகன்களும் உதாசீனப்படுத்த ஆரம்பித்தனர். அவ்வப்போது வீட்டை விட்டு வெளியே கொண்டு வந்து போட்டு விடுவார்களாம். ஊர் மக்கள் சமாதானப்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது திடீரென மீண்டும் தங்கையனை கொண்டு வந்து ரோட்டில் போட்டு விட்டனர் இரு பிள்ளைகளும். அவர் பயன்படுத்தி வரும் கட்டில் உள்ளிட்ட சாமான்களையும் எடுத்து வந்து ரோட்டில் வீசி விட்டனர்.
இது அக்கம் பக்கத்தினருக்கு அதிர்ச்சியைத் தந்தது. உடனடியாக ஊர் மக்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் ஆம்புலன்ஸுடன் விரைந்து வந்து தங்கையனை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். தங்கையனின் மகன்களிடம் தற்போது போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Post A Comment: