குமரி மாவட்ட கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தைச் (சி.ஐ.டி.யு.) சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுப்பதற்காக திரண்டனர். இதற்காக அவர்கள் மாவட்ட சிறை அருகில் இருந்து கலெக்டர் அலுவலக முன்புற வாயில் வரை நீண்ட வரிசையில் சமூக இடைவெளியைப் பின்பற்றி நின்றனர்.
ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. மேலும் முன்புற வாயில் கதவையும் போலீசார் அடைத்து வைத்திருந்தனர். இதையடுத்து அனைவரும் ஒன்றாக திரண்டு, கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று மனு கொடுத்து விட்டுத் தான் கலைந்து செல்வோம் என்று கூறினர். இதனால் போலீசாருக்கும், கட்டிட தொழிலாளர்களுக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் கட்டிட தொழிலாளர்கள் அனைவரையும் கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுப்ப முடியாது, தொழிலாளர்கள் சார்பில் 2 அல்லது 3 பேர் உள்ளே செல்ல அனுமதிக்கிறோம் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கட்டிட தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகன் ஆகியோர் அனைவரிடமும் மனுக்களை சேகரித்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதியை சந்தித்து கொடுத்தனர்.
அந்த மனுக்களில், கட்டிட தொழிலாளர்களுக்கு நலவாரியம் மூலம் மாதம்தோறும் வழங்கப்பட வேண்டிய மாதாந்திர ஓய்வூதியத்தொகை 3 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கிறது. அதனை உடனடியாக வழங்க வேண்டும். அரசால் அறிவிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு கால நிவாரண பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய் வழங்கப்படாத தொழிலாளர்களுக்கு உடனடியாக அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் வழங்க வேண்டும், 13 ஆயிரம் தொழிலாளர்கள் நல உதவிகளுக்காக சமர்ப்பித்த நலவாரிய அட்டைகளை அனைவருக்கும் திரும்ப வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தன. அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட வருவாய் அதிகாரி தெரிவித்ததாக கட்டிட தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு நிலவியது.
குமரி மாவட்ட புகைப்பட மற்றும் வீடியோ கிராபர்கள் சங்க தலைவர் நீலகண்டன், செயலாளர் சதீஸ்குமார் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மத்திய, மாநில அரசுகள் விதித்திருக்கிற கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி திருமண மண்டபங்களில் வழக்கம் போல் சுப நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும். சாமானிய புகைப்பட, வீடியோ கலைஞர்களுக்கு தொழில் தொடங்கும் காலம் வரையிலும் குறைந்தபட்சம் மாதம் 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்க வேண்டும். மின்கட்டணத்தில் தள்ளுபடி சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தன.
மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு (விடுதலை) கட்சியின் மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து தலைமையில் தென்தாமரைக்குளத்தைச் சேர்ந்த மனோஜ் என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தன்னை கடந்த மே மாதம் 30-ந் தேதி சட்டவிரோதமாக கைது செய்து, பொய் வழக்குப் பதிவு செய்து அடித்து துன்புறுத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குடும்பத்துக்கும் பாதுகாப்பு தரவேண்டும். எனக்கு நடந்த சட்டவிரோத செயலுக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மனித பாதுகாப்புக்கழக நிறுவன தலைவர் ஜெய்மோகன் தலைமையில் மாவட்ட செயலாளர் ஜான் வின்சென்ட் ராஜ், மாவட்ட துணைத்தலைவர் மகாதேவன், இணை செயலாளர் ராமசாமிபிள்ளை, மாவட்ட மகளிர் அணி செயலாளர் அகிலா, துணை செயலாளர் ஜெயபாரதி, செய்தி தொடர்பாளர் ஏசுதாஸ் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா பரவலால் மக்கள் வேலை வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்கள். இந்த நேரத்தில் கல்வி கட்டணங்கள் யாரும் கட்ட தேவையில்லை என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆனால் அரசின் உத்தரவை மதிக்காமல் கொரோனா பேரிடர் காலத்தில் கல்வியை வியாபாரமாக்கி, ஆன்லைன் வகுப்புகள் என்ற பெயரில் சில பள்ளிகள் கட்டாய வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த பள்ளிகள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும், அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Post A Comment: