குலசேகரத்தில் காதல் என்ற பெயரால் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், 17 வயதான மைனர் பையனுடன் ஓடிய சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குலசேகரம், அன்பு நகரைச் சேர்ந்த அந்த பையன் 17 வயதானவர். அவர் அப்பகுதியில் வேன் கிளீனராக வேலை பார்த்து வருகின்றார். அப்பகுதியிலேயே அமைந்துள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருடன் நெருங்கிப் பழகிய கிளீனருக்கு, நாளடைவில் அப்பழக்கம் காதலாக மாறியது.

இப்பழக்கத்தால் அம்மாணவியையும், அவருடைய தோழிகள் சிலரையும் கூட்டிக் கொண்டு சுற்றுலா என்ற பேரில் கன்னியாகுமரி சென்றுள்ளார் அவர். இத்தகவலை அறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்று குலசேகரம் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து அப்பையன் போலீசாரால் அழைத்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார். இருவரும் மைனர் என்பதால் வெறும் எச்சரிக்கையுடன் விட்டுவிட்டனர்.
இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்ற அம்மாணவி வீட்டிற்கு திரும்பவே இல்லை. உடனே அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை தேடிக் களைத்துப் போய் போலீசில் மீண்டும் புகார் அளித்தபோதுதான் அவர் கிளீனருடன் ஓடியது தெரியவந்துள்ளது. உடனடியாக அந்தப் பையனின் வீட்டிற்குச் சென்ற போலீசார் அங்கிருந்த ஜோடியை மடக்கிப் பிடித்தனர்.
அப்போது அம்மாணவி நான் காதலனுடன் தான் செல்வேன் என்று அடம்பிடித்துள்ளார். இதனால் போலீசார் அம்மாணவிக்கு அறிவுரை கூறி அனுப்பியதுடன், கிளீனரையும் அவருக்கு தொல்லை கொடுக்க கூடாது என்று மிரட்டி அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குலசேகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Post A Comment: